கோட் படத்துக்கு அதிக கட்டணம் வசூல் குடும்பத்துடன் வந்தவர்கள் ரிட்டர்ன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 'கோட்' திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் வெளியான, 'கோட்' திரைப்படம் கடந்த, 5ல் வெளியானது. கிருஷ்ணகிரியில் மொத்தமுள்ள, 5 தியேட்டர்களில், 4 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இந்நிலையில் முதல் நாளில் தியேட்டர்கள் தங்கள் இஷ்டம் போல், விலை வைத்து டிக்கெட் விற்றனர். அதிகபட்சமாக, 1,000 ரூபாய் வரை டிக்கெட் விற்றது. நேற்று தியேட்டர்களில் படம் பார்க்க அதிகளவில் மக்கள் வந்தனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிகளவில் டிக்கெட் விற்பனையால், குடும்பத்துடன் வந்த பலர் திரும்பிச்சென்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'விடுமுறை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட தியேட்டர் வந்தால் ஒவ்வொரு இடத்திலும் டிக்கெட் விலையை கூடுதலாக சொல்கிறார்கள். படம் வெளியாகி, 3 நாட்கள் ஆன நிலையில், 200 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்கின்றனர்,' என்றனர்.இது குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு கூறுகையில், “இது குறித்து உடனடியாக அலுவலர்களை அனுப்பி நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார்.