ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் வேளாண் துறை சார்பில், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் சித்தனப்பள்ளி, ஈச்சங்கூர், நல்லுார், பாகலுார், கோபனப்பள்ளி மற்றும் டி.பாரந்துார் கிராமங்களில் உள்ள, 20 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்கள் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பயன்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், வெளிமாநில கண்டுணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமையில், கடந்த, 2023 டிச., 26 முதல், 30 வரை கண்டுணர்வு சுற்றுலாவுக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.பெங்களூரு ஜி.கே.வி.கே., வேளாண் அறிவியல் மையத்தில், இயற்கை விவசாய திட்ட பேராசிரியர் மற்றும் தலைவர், போரய்யா செயற்கை உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்கள் மூலம் விளைச்சல் அதிகப்படுத்தும் தொழில்நுட்ப முறைகள் பற்றியும், பஞ்சகாவியா, ஜீவாமிருதம் தயாரிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். பேராசிரியர்கள், ஹர்சா, நளினி, பிரபு மற்றும் பலர், இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.கண்டுணர்வு சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.