கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு நாளையொட்டி, 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரிக்கரையில், 800 ஆண்டு பழமையான காலபைரவர் கோவில் உள்ளது. 107 கிராம மக்களின் குல தெய்வமான இக்கோவிலில், 12 ஆண்டுக்கு பின் கடந்த, 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று, கிருஷ்ணகிரி தர்மராஜா சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து, நேதாஜி சாலை, குப்பம் சாலை வழியாக, காலபைரவர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், பூஜை பொருட்களை வழங்கி ஊர்வலத்தில் பங்கேற்றார். பால்குட ஊர்வலத்தின்போது, காளி, சிவன், பார்வதி வேடமணிந்து, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம், கவுரவ தலைவர் சேகர், கோவில் தர்மகர்தாக்கள் கிருஷ்ணமூர்த்தி, பைரேஷ், நிர்வாகிகள் ஜெயராமன், கணேசன், சங்கர் உட்பட பலர் செய்திருந்தனர்.