தோட்டத்தில் டிரைவர் கொன்று எரிப்பு தீர்த்துக்கட்டிய காதலன், காதலியுடன் கைது
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, எரிந்த நிலையில் டிரைவர் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், அவரை அடித்து கொன்றவருடன், அவரது காதலியையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 30, டிரைவர். போத்திநாயனப்பள்ளியிலுள்ள இவரது விவசாய நிலத்தில் மார்ச் 2 இரவு, உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.மகாராஜகடை போலீசார் விசாரணையில், கார்த்திக்கை கொன்று, தீ வைத்து எரித்தது தெரிந்தது. அப்பகுதி, 'சிசிடிவி' மற்றும் அலைபேசி டவர் லோகேஷன் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில் கடந்த, 2 இரவு, கிருஷ்ணகிரி அடுத்த பழையூரை சேர்ந்த புவனேஸ்வரி, 22, அலைபேசியிலிருந்து, தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தை சேர்ந்த, தனியார் மருந்தக பணியாளர் தினேஷ்குமார், 25, என்பவருக்கு அடிக்கடி போன் வந்ததும், அவரது அலைபேசி கொலை நடந்த இடத்திற்கு அருகே வந்து சென்றதும் தெரிந்தது. நேற்று மாலை, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையிலுள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்த அவரை மகாராஜகடை போலீசார் பிடித்தபோது, அவர் கார்த்திக்கை கொன்றதை ஒப்புக்கொண்டார்.அவர் போலீசில் அளித்த வாக்குமூலம்: புவனேஸ்வரியும், தினேஷ்குமாரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். அதற்கு முன் புவனேஸ்வரிக்கு, கார்த்திக்குடன் பழக்கம் இருந்துள்ளது. கார்த்திக், புவனேஸ்வரிக்கு அடிக்கடி போன் செய்து வந்துள்ளார். இதை கேட்ட தினேஷ்குமார் ஆத்திரமடைந்து, மார்ச் 2ம் தேதி இரவு, போத்திநாயனப்பள்ளி விவசாய நிலத்தில் துாங்கி கொண்டிருந்த கார்த்திக்கை, புவனேஸ்வரி துணையோடு இரும்பு ராடால் அடித்து கொன்றார். தடயங்களை மறைக்க கொட்டகையில் இருந்த பெட்ரோலை எடுத்து, அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு, பழையூர் ஏரிக்கரையில் இரும்பு ராடை வீசி சென்றுள்ளார்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.தினேஷ்குமார், அவரது காதலி புவனேஸ்வரியை மகாராஜகடை போலீசார் கைது செய்தனர்.