கிருஷ்ணகிரி,:சென்னை உயர்நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கனிமவள கொள்ளை குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இதையடுத்து நேற்று கல் குவாரிகளில் சேலம் டி.ஐ.ஜி., கிருஷ்ணகிரி கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் ஆய்வு நடத்தினர்.கனிமவள கொள்ளைசேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் ராதாகிருஷ்ணன் தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றம் குட்டுஇதில் கிருஷ்ணகிரி ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமியின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 198 கோடி ரூபாய் அளவிற்கு கனிமவள கொள்ளை நடந்துள்ளதாகவும் கூறியிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி அடுத்த பாலேகுளி பெருமாள் கோவில், பட்டாளம்மன் கோவில், தேன்கனிக்கோட்டை அடுத்த நாகமங்கலத்தில் உள்ள நீலகிரி ஹனுமந்தராயசுவாமி கோவில் நிலங்களில் அமைச்சர் சேகர்பாபு கடந்த, 24ல், ஆய்வு செய்தார். அதிகாரிகள் குழு ஆய்வுகடந்த, 26ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வரும், 30க்குள் இப்பகுதிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான அறிக்கை கொடுக்குமாறு கூறியுள்ளனர்.இதையடுத்து கிருஷ்ணகிரி, பர்கூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட மலைசந்து. மூங்கில்புதூர், ஜெகதேவி, உள்ளிட்ட, 6 கிரானைட், கல்குவாரிகளில் சேலம் டி.ஐ.ஜி., உமா, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி, பர்கூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிரானைட் மற்றும் கல்குவாரிகளில் அதிகாரிகள் குழு சோதனை துவங்கியுள்ளது. இதில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அபராதத்துடன் வழக்கும் பதிய அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.உஷாரான கிரானைட் முதலாளிகள்ஆனால் அதிகாரிகள், கல்குவாரிகள், கிரானைட் பகுதிகளில் ஆய்வை துவங்க உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட கிரானைட் முதலாளிகள், அப்பகுதிகளில் உள்ள தங்களது கல் அறுக்கும் இயந்திரங்களை இரு நாட்களுக்கு முன்பே எடுத்து சென்றுள்ளனர். மேலும், அதிகாரிகள் வரும் பாதையில் கார் போக முடியாத அளவில் பெரிய அளவிலான கற்களையும் கொட்டி சென்றனர். அந்த கற்கள் மீது ஏறி சென்று அதிகாரிகள் கனிமவள கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டனர்.