நா.த.க., முன்னாள் நிர்வாகி கிருஷ்ணகிரி வழக்கில் கைது
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி., முகாமில், பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியுமான சிவராமனால் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.இதில், சிவராமன் உட்பட 13 பேரை, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைதுக்கு முன் விஷம் குடித்த சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.தமிழக அரசு இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு, பல்நோக்கு குழுக்களை அமைத்து விசாரித்து வருகிறது. இதில், மேலும் ஒரு பள்ளியில் முகாம் நடத்தியது தொடர்பாக அப்பள்ளி பெண் முதல்வர் கைதானார். என்.சி.சி., போலி முகாமை மறைக்க முயன்ற, காவேரிப் பட்டணம் அரசு பள்ளி என்.சி.சி., ஆசிரியர் கோபு, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனால் கைது எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்தது.கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த முகாம் குறித்த விபரங்கள், அப்பள்ளி கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்கில் இருந்துள்ளது. இது போலீசார் கையில் சிக்கினால், மேலும் பலர் சிக்கக்கூடும் என நினைத்த சிவராமன், கைதாவதற்கு முன், தன் நண்பரும், நா.த.க., கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான கருணாகரன், 32, என்பவரிடம் கூறியுள்ளார்.பள்ளிக்கு சென்ற கருணாகரன், ஹார்டு டிஸ்க்கை எடுத்து எரித்தது, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து கருணாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.