ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலுார் ரோடு பகுதியில் வசிப்பவர் ரமேஷ், 47; தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் பக்கத்திற்கு பிப்., 28ல் வந்த மெசேஜில், பகுதி நேர வேலை செய்தால் ஊதியம் எனக்கூறி சில, 'லிங்க்' இருந்தன. அதை கிளிக் செய்த ரமேசுக்கு சிறிதளவு பணம் கிடைத்தது.அதன் பிறகு, அதே பக்கத்தில் சில, 'லிங்க்' அனுப்பி அதை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து அனுப்பினால், முதலீடு செய்யும் பணத்திற்கு லாபம் என இருந்தது. ரமேஷ், அவர்கள் கூறியபடி 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, அதனுடன் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு, 1,000 ரூபாய் அனுப்பியவுடன், 1,200 ரூபாயாக திரும்ப கிடைத்தது.மேலும், அதிகளவில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று அவர்கள் மெசேஜ் அனுப்பினர். இதை நம்பிய ரமேஷ், தன்னிடமிருந்த, 5.76 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். ஆனால், எந்த பணமும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.