காவலாளியை கொல்ல முயன்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே, எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளையடிக்க வந்து, இரவு வாட்ச்மேனை கொல்ல முயன்ற சம்பவத்தில், கர்நாடகாவை சேர்ந்த, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.டி.ஐ., அருகில், தனியார் எலக்ட்ரிக்கல்ஸ் கடை உள்ளது. கடந்த, 8ல் கடையில் போச்சம்பள்ளி அடுத்த காட்டுவென்றஹள்ளியை சேர்ந்த திம்மன், 65, என்பவர் இரவு காவலுக்கு இருந்தார். அப்போது கடையில் கொள்ளையடிக்க காரில் வந்த, 6 பேர் கும்பல் திம்மனை கொல்ல முயன்றது. ஆட்கள் வரும் சத்தத்தால், அக்கும்பல் தப்பியது.இதுகுறித்து விசாரிக்க, பர்கூர் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டது. வாட்ச்மேனை கொல்ல முயன்ற பெங்களூருவை சேர்ந்த முகமது ரீகன், 25, பரூக் பாஷா, 22, முகமது சுபேர், 21, சையது சித்தக், 23, முபாரக் கான்,22, ஆகிய ஐவரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து தோஸ்த் பிக்கப் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாக, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. டூவீலர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. டூவீலர் திருட்டில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கும்பல் கைதான நிலையில், தற்போது கொள்ளை, கொலை முயற்சியிலும், கர்நாடக மாநில கொள்ளை கும்பல் சிக்கியுள்ளது. இவர்களுக்கு, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலரும், உதவியிருக்கக்கூடும் என்ற கோணத்தில், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.