| ADDED : பிப் 06, 2024 10:19 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை தாலுகா அனுமந்தீர்த்தம் கிராம மக்கள் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தத்தில் கடந்த, 50 ஆண்டுக்கும் மேலாக தோப்பு புறம்போக்கு நிலத்தில், 75 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கிறோம். எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளோம். இதையடுத்து கடந்த, 2022 ஜூன், 8ல் ஊத்தங்கரையில் நடந்த ஜமாபந்தியில் பட்டா கேட்டு மனு அளித்ததன் பேரில், 2 ஆண்டுகளாக ஊத்தங்கரை தாசில்தாரின் முயற்சியால், நிலத்தை அளவீடு செய்து பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.ஆனால் இந்த பட்டியல், நிலத்தின் வகை மாற்றத்திற்கு வி.ஏ.ஓ., ஆர்.ஐ., பிர்கா சர்வேயர் ஆகியோரின் ஒத்துழைப்பின்றி, நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. மேலும், 4 முறை நிலத்தை அளந்தும் அதற்கான பைல் இதுவரை காணவில்லை என வருவாய்த்துறையினர் கூறி வருகின்றனர். இதனால் இரண்டு தலைமுறைகளாக பட்டா கிடைக்காமல் மிகவும் ஏமாற்றுத்துக்குள்ளாகி வருகின்றோம்.எனவே, கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்திலாவது, எங்களுக்கு பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.