உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்பா சென்டரில் போலி போலீசார் கைவரிசை கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது

ஸ்பா சென்டரில் போலி போலீசார் கைவரிசை கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது

நாமக்கல்:நாமக்கல், 'ஸ்பா' சென்டரில் புகுந்து கைவரிசை காட்டிய, 'போலி' போலீசார், ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, இரண்டு பேரை தேடி வருகின்றனர்.நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், சேலம் மாவட்டம், மல்லுாரை சேர்ந்த இளங்கோவன், 'ஸ்பா' என்ற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த மையத்திற்கு, கடந்த, 18 மாலை, 3:30 மணிக்கு காரில், ஆறு பேரும், டூவீலரில், இரண்டு பேர் என, மொத்தம், எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். அவர்கள், தாங்கள் போலீசார் என்றும், 'ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.பின், திடீரென அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி, ஒரே அறையில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து, ஒன்னே முக்கால் பவுன் நகை, 40,000 ரூபாய் ரொக்கம், மொபைல் போனை பறித்துக்கொண்டனர். மேலும், 'சிசிடிவி' கேமரா பதிவு காட்சிகள் கொண்ட, 'ஹார்ட் டிஸ்க்'கையும் எடுத்துக்கொண்டு தப்பினர்.இதுகுறித்து, நாமக்கல் போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் தலைமையில், நான்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார், அருகில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், எட்டு பேர் கார், டூவீலரில் தப்பி செல்வது தெரியவந்தது. மேலும், அவர்களது முகங்கள் தெளிவாக அடையாளம் தெரிந்தன. கார், டூவீலர் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், நான்கு பேர், கரூர் மாவட்டம்; இரண்டு பேர், ப.வேலுார்; இரண்டு பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என, தெரியவந்தது.இதையடுத்து, கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தை சேர்ந்த விமல் பஷீர், 27, ராஜசேகரன், 25, தான்தோன்றிமலை யுவராஜ், 24, புகழூர் செல்வமாணிக்கம், 27, நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி அடுத்த செங்கப்பள்ளி கார்த்திகேயன், 25, சந்துரு, 24 ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 16,000 ரூபாய் ரொக்கம், ஒரு மொபைல் போன், ஒன்னே முக்கால் பவுன் நகை, 'ஹோண்டா' சிட்டி கார், 'பஜாஜ் பல்சர்' டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த, ஆறு பேரையும், நாமக்கல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, வரும், 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தலைமறைவாக உள்ள, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த, முக்கிய குற்றவாளிகள், இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை