கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் சங்க, கிருஷ்ணகிரி கிளை சார்பில், கே.ஆர்.பி., அணையில், பாரத சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கு, 7 நாட்கள் அடிப்படை பயிற்சி முகாம் நடந்தது. கடந்த, 18ல் துவங்கி நேற்று முகாம் நிறைவடைந்தது.சாரணர் பிரிவு முகாம் தலைவராக, கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் சர்வேசன், உதவி தலைவராக கணேசன், சாரணியர் பிரிவு முகாம் தலைவியாக சியாமளா, மாவட்ட பயிற்சி ஆணையர் அர்த்தநாரி ஆகியோர் பணியாற்றினர். முகாம் உதவியாளர்களாக, மாவட்ட துணை செயலர் பவுன்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் காந்தி, தமிழரசி, பார்த்திபன் ஆகியோர் செயல்பட்டனர்.இப்பயிற்சி முகாமில், நிர்வாகம், வனக்கலை, முதலுதவி, மதிப்பீடு, திட்டமிடுதல், முடிச்சுகள், படை பயிற்சிகள், ஆரோக்கியம், சேவைகள், விழிப்புணர்வு முகாம்கள், நடை பயணம், சமையல் கலை, கைவினை பொருட்கள், சாரணர் வாக்குறுதி, சாரணர் சட்டங்கள், தலைமை பண்புகள் வளர்த்தல் மற்றும் கூடாரம் அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சாரணர் பிரிவில், 20 ஆசிரியர்களும், சாரணியர் பிரிவில், 26 ஆசிரியர்களும் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் சாரணர் படையை துவங்கி சிறப்பாக நடத்துவோம் என்று உறுதி அளித்தனர்.