உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அண்ணாமலையார் மலையில் மண் சரிவு இடத்தை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆய்வு

அண்ணாமலையார் மலையில் மண் சரிவு இடத்தை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆய்வு

திருவண்ணாமலை, டிச. 4--திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை, ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை மீது கடந்த, 1ம் தேதி மாலை, 3:00 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில், வ.உ.சி., நகர், 11வது தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார் வீடு சிக்கியது. வீட்டிலிருந்த, 7 பேர் சிக்கி பலியாகிய நிலையில், அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர், 35 பேர் உள்ளிட்ட, 170 பேர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், இறந்தவர்களின் உடல்கள் துண்டு துண்டாக மீட்கப்பட்ட நிலையில், அடையாளம் காண முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி, மீட்பு பணி நடந்த இடத்தை ஆய்வு செய்தார். அதன்பின், இரவு நேரம் என்பதால் மீட்பு பணி கைவிடப்பட்டது. நேற்று காலை இறந்தவர்களின் உறவினர்கள், 5 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள இருவரது சடலங்களை மீட்க, மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. மாலை, 5:30 மணியளவில், மண் சரிவில் சிக்கிய வீட்டின் முழு பகுதியையும், மண் மற்றும் கற்களை அகற்றி, துண்டு துண்டாக இருந்த, எஞ்சிய உடல் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டன. இதோடு மீட்பு பணி நிறைவடைந்தது. இறந்தவர்களின் முகங்கள் உருக்குலைந்த நிலையில், சரியாக பார்க்க முடியாத நிலையில் உடற்கூறு ஆய்விற்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சடலங்கள் உடற்கூறு ஆய்வு செய்து, இன்று, 4ம் தேதி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.முன்னதாக, திருவண்ணாமலை மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், சென்னை ஐ.ஐ.டி., ஓய்வுபெற்ற வல்லுனர்கள் மோகன், நாரயணராவ் மற்றும் பூமிநாதன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து மண்ணை சேகரித்து, அதன் தன்மை குறித்து ஆய்விற்கு எடுத்து சென்றனர். அந்த ஆய்வின் அறிக்கையை, தமிழக அரசிடம் சமர்பிக்க உள்ளனர். ஆய்வின்போது, அவர்கள் தெரிவிக்கையில், 'தொடர் மழை பெய்தால், மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மழையின்போது எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை, மலை அருகே வீடுகள் கட்டும்போது, பொதுமக்கள் முன்கூட்டியை இன்ஜினியர் மூலம் ஆய்வு செய்து பணியை தொடங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ