லாரியை லவட்டி வந்த ஊத்தங்கரை வாலிபர் தப்பிக்க பாலத்திலிருந்து குதித்ததில் படுகாயம்
ஓசூர், கர்நாடகாவிலிருந்து லாரியை திருடி வந்த வாலிபர், அதை மீட்க வந்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, பாலத்திலிருந்து குதித்து படுகாயமடைந்தார்.கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் கடந்த, 22ம் தேதி இரவு, லாரியை ஆன் செய்த நிலையில் நிறுத்தி விட்டு, அதன் டிரைவர் டீ சாப்பிட சென்றார். இதை நோட்டமிட்ட வாலிபர், லாரியை திருடி கொண்டு, தமிழக எல்லையான ஓசூர் நோக்கி ஓட்டி வந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் தரப்பினர் நான்கு பேர், லாரிக்கு பின்னால் காரில் துரத்தி வந்தனர்.பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூரில் உள்ள தளி ஜங்ஷன் மேம்பாலம் மீது லாரியை வாலிபர் ஓட்டி சென்ற போது, குறுக்கே காரை நிறுத்தி லாரியை நான்கு பேர் தடுத்து நிறுத்தினர். வாலிபரை லாரியிலிருந்து கீழே இறக்கி அவரை கடுமையாக தாக்கினர். இதனால் அந்த வாலிபர், அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது சட்டையை கழற்றி விட்டு, பாலத்திலிருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார். லாரியை எடுத்து கொண்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர். படுகாயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் அனுமதிக்கப்பட்டார்.தகவலறிந்த ஹட்கோ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார், வாலிபரிடம் விசாரித்த போது, ஊத்தங்கரை அடுத்த நாயக்கனுார் காமராஜ் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம், 22, என்பதும், லாரியை திருடி வந்ததால், அதை மீட்க வந்தவர்கள் தாக்கியதும், வலி தாங்க முடியாமல் பாலத்திலிருந்து குதித்ததும் தெரிந்தது. சண்முகத்தை தாக்கிய, 4 பேர் மீது ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.