சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி புகார் கொடுத்தால் தான் நடவடிக்கையாம்
பாலக்கோடு, பாலக்கோடு பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டத்தால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், ஜோதிஅள்ளி அடுத்த பூச்செட்டிஅள்ளி கிராமம் அருகே சிறிய குன்றின் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்த வீடியோ வைரலானது. கடந்த, 3 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. துவக்கத்தில், ஆதாரமின்றி சிறுத்தை நடமாட்டத்தை ஒப்புக்கொள்ள முடியாது என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன், வாழைத்தோட்டம் பகுதியில், விவசாயி ஒருவர் வளர்க்கும் கோழியை இரவில், சிறுத்தை ஒன்று கவ்விச்செல்லும், 'சிசிடிவி' பதிவு வெளியாகி, பீதியை ஏற்படுத்தியது. வனத்தையொட்டிய பகுதியில், குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று நடமாடுவதையும், கிராம மக்கள் பார்த்ததாக தெரிவித்தனர். இதனால், சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கையாக இருக்க, வனத்துறையினர் ஒலிபெருக்கியால் எச்சரித்தனர்.கடந்த, 2 மாதங்களுக்கு முன், வாழைத்தோட்டம் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டருகே நாய் ஒன்றை, இரவில் சிறுத்தை கவ்விச் சென்றது. தற்போது அதே விவசாயியின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு கோழியை, சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. இந்த, 'சிசிடிவி' காட்சிகள் வைரலாகி வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் பாலக்கோடு வனச்சரகத்தையொட்டிய கிராம மக்கள், அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'யானைகளால், பாலக்கோடு வனச்சரகத்தில், கடந்த சில ஆண்டுகளில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது குறிப்பிட்ட சில கிராமங்களில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவில் கோழி, நாய் என கவ்விச் செல்லும் சிறுத்தையால், மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், இரவில் இயற்கை உபாதைகளுக்கு கூட வெளியே செல்ல முடியவில்லை. சிறுத்தைகளை பிடித்து, அடர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.இது குறித்து, பாலக்கோடு வனச்சரகர் நடராஜிடம் கேட்டபோது, ''இப்போது சிறுத்தையை பிடிக்க முடியாது, பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்கக்கோரி, தாசில்தார், வனத்துறையினர் அல்லது கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். பின், மனு குறித்த அறிக்கை, உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்பப்பட்டு, அதன்பின், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்,'' என்றார்.