ஓசூர் மாநகராட்சியுடன் 9 பஞ்.,க்கள் இணைப்பு
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியுடன், 9 பஞ்.,க்களை இணைக்க முடிவு செய்து, தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 45 வார்டுகள் உள்ளன. 72.41 சதுர கி.மீ., பரப்பளவை கொண்ட மாநகராட்சிக்கு, 130 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் உள்ளது. மாநகராட்சியுடன், 9 பஞ்.,க்களை இணைத்து, வருவாய் மற்றும் வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், பஞ்.,ல் வாழும் கிராம மக்கள், கூடுதலான சொத்து வரி, விவசாயம் பாதிப்பு போன்றவை ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த, 2022ல், 9 பஞ்.,க்களையும் இணைத்து, மாநகராட்சி வார்டு எண்ணிக்கையை அதிகரித்து உள்ளாட்சி தேர்தலை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. வரும் டிச., மாதத்துடன் பஞ்.,க்களில் உள்ளாட்சி பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால், ஓசூர் மாநகராட்சியுடன், அச்செட்டிப்பள்ளி, பேகேப்பள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி, நல்லுார், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி அக்ரஹாரம், பேரண்டப்பள்ளி, பூனப்பள்ளி ஆகிய, 9 பஞ்.,க்களை இணைக்க அரசு முடிவு செய்து, நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஓசூர் மாநகராட்சியில் கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கின்படி, 2,45,354 பேர் வசித்து வந்தனர். இந்த, 9 பஞ்.,க்களையும் இணைத்தால், 52,810 கூடுதலாக இணைவார்கள். அதன்படி மாநகராட்சியின் மக்கள் தொகை எண்ணிக்கை, 2,98,164 எனவும், மாநகராட்சியின் பரப்பளவு, 173.78 சதுர கி.மீ., பரப்பளவாகவும், வரி வருவாயும் அதிகரிக்கும். ஓசூர் மாநகராட்சியில், 2011ம் ஆண்டுக்கு பின், மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை. தற்போது, 3.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. இதில் மேலும், 9 பஞ்.,க்கள் இணைய உள்ளதால், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, அரசு அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.