உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, 7 கட்டடங்களை இடிக்க வந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சாந்தி நகர், 1வது கிராஸ் மற்றும் 2வது தெருவில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுத்துள்ளதாக கூறி, 6 வீடுகள் மற்றும் ஒரு கார் ஷெட் உள்பட, 7 கட்டடங்களை இடிக்க நகராட்சி புனரமைப்பு ஆய்வாளர் மலர்விழி தலைமையில் நகராட்சி பணியாளர்கள், பொக்லைனுடன் வந்தனர்.அப்போது அங்கு திரண்ட வீட்டின் உரிமையாளர்கள், இப்பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வீடுகளை இடிக்க நகராட்சிக்கு அதிகாரம் இல்லை என தடை வாங்கியுள்ளோம். அப்படியிருக்க வருவாய்துறையினர் அறிக்கையை வைத்து வீடுகளை எப்படி இடிக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓடை இருப்பதாக கூறுகிறீர்கள், எங்கிருந்து எங்கு ஓடை செல்கிறது என்ற ஆவணத்தை காட்டுங்கள் என்றனர். மேலும் வீடுகள் இடிப்பது குறித்து நீதிமன்ற ஆணை உள்ளதா என கேட்டனர்.அதற்கு நகராட்சி புனரமைப்பு ஆய்வாளர் மலர்விழி, இதையெல்லாம் நீங்கள் நீதிமன்றத்தில் கடந்த, 6 ஆண்டுகளாக ஏன் கூறவில்லை. எங்கள் பணியை செய்ய விடுங்கள் என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க., அரசு, அதிகாரிகளை கண்டித்தும் வீட்டின் உரிமையாளர்கள் கோஷம் எழுப்பினர்.கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., நகர செயலர் கேசவன் மற்றும் வக்கீல்கள் வந்து சமசரம் பேசினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக, அவகாசம் கேட்டு மனு அளித்ததன் பேரில், 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி