பட்டா நிலத்தில் கால்வாய் விவசாயி தீக்குளிக்க முயற்சி
ஓசூர், ஓசூர் அடுத்த அக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் கோபால்ரெட்டி, 65. விவசாயி; இவருக்கு அப்பகுதியில், 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.அப்பகுதியிலுள்ள தனி நபருக்கு சொந்தமான, 80 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங்க் மற்றும் குடியிருப்பு கழிவு நீர், கோபால்ரெட்டிக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்றதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலையில் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், தனி நபரின் குடியிருப்பு பகுதியிலேயே கழிவு நீர் உறிஞ்சும் தொழில்நுட்பம் அமைத்து கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கெலமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் மூலம், போலீசார் உதவியுடன் கோபால்ரெட்டியிடம் முன் அனுமதி பெறாமல், அவரது பட்டா நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி, தனி நபருக்கு ஆதரவாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நேற்று ஏற்பாடுகள் நடந்தன.இதனால் நேற்று கோபால்ரெட்டி, தன் விவசாய நிலத்திற்கு சென்று, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கால்வாய் அமைப்பதற்கான பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.