ஓசூர் : பையப்பனஹள்ளி - ஓசூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணியை, நடப்பாண்டு இறுதிக்குள், ரயில்வே நிர்வாகம் முடிக்குமா என்ற கேள்வி, பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் வழியாக தினமும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. கர்நாடகா மாநிலம், பையப்பனஹள்ளியில் இருந்து ஓசூர் வரை, ஒரே ஒரு ரயில்பாதை மட்டுமே உள்ளதால், கிராசிங்கிற்காக ரயில்கள் ஆங்காங்கு ஸ்டேஷன்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிக்கிறது. திட்டம் அறிவிப்புஇதை குறைத்து, கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக கடந்த, 2018 - 19 ல், 498.73 கோடி ரூபாய் மதிப்பில், பையப்பஹள்ளி - ஓசூர் இடையே, 48 கி.மீ., துாரத்திற்கு இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், 40.5 கி.மீ., துாரம் கர்நாடகா மாநிலத்திற்குள் வருகிறது. மீதமுள்ள, 7.50 கி.மீ., துாரம் தமிழகத்திற்குள் வருகிறது. கடந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்பணி இவ்வாண்டு இறுதி வரை நடக்கும் நிலை உருவாகியுள்ளது. இரட்டை ரயில்பாதை பணிகள், பல கட்டங்களாக பிரித்து நடந்து வருகின்றன. அதன்படி பையப்பனஹள்ளி - பெல்லந்துார் சாலை வரை, 9.7 கி.மீ., துாரம் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி வரும் செப்., மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல், பெல்லந்துார் சாலை முதல் கார்மேலரம் வரையுள்ள, 3.50 கி.மீ., துார பணி மற்றும் ஆனைக்கல் - மாரநாயக்கனஹள்ளி வரையிலான, 6.90 கி.மீ., துார பாதை ஆகியவை வரும் மார்ச் மாதம் முடிவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மந்தகதியாக பணிஆனால், ஹீலாலிகே முதல் ஆனைக்கல் சாலை வரையுள்ள, 10 கி.மீ., துார பாதை பணிகள் மிக மந்தகதியாக அம்மாத இறுதி வரை செல்லும் என கூறப்படுகிறது. மாரநாயக்கனஹள்ளி - ஓசூர் வரையிலான, 7.60 கி.மீ., பாதை, வரும் ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும் என, ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பணிகள் மந்தகதியில் நடப்பதால், இரட்டை ரயில்பாதை இவ்வாண்டு பயன்பாட்டிற்கு வருமா என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.பயணிகள் எதிர்பார்ப்புபல்வேறு கட்டங்களாக நடக்கும் இப்பணியில், கார்மேலரம் - ஹீலாலிகே இடையேயான, 10.30 கி.மீ., துார பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளிலும் விரைந்து பணிகள் முடிந்தால் மட்டுமே, இவ்வாண்டு இறுதிக்குள் இரட்டை ரயில்பாதை திட்டம் பயன்பாட்டிற்கு வரும். அதனால், பணிகளை ரயில்வேத்துறை விரைந்து முடிக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, ஓசூரிலிருந்து ஓமலுார் வரை இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கான திட்ட மதிப்பீட்டிற்கு, மத்திய ரயில்வேத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால், திட்ட மதிப்பீட்டு பணிகள் முடிந்தவுடன், ஓசூர் - ஓமலுார் இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் துவங்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.