ஒரு பக்கம் பால பணிகள்; ஒரு பாலம் பழுதால் அவதி வாகன ஓட்டிகள் நேரத்தை வீணடிக்கும் 55 கி.மீ., என்.ஹெச்.,
ஓசூர், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஒரு பக்கம் பால பணிகள், ஒரு பக்கம் பாலம் பழுதாகி இருப்பதால், 55 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலையை கடக்க, 2 மணி நேரமாவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.கிருஷ்ணகிரி டோல்கேட்டிலிருந்து, கர்நாடகா மாநில அத்திப்பள்ளி டோல்கேட் வரையுள்ள, 55 கி.மீ., துாரத்தை, ஒரு மணி நேரத்தில் கடந்து விடும் வகையில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தினமும், 75,000 வாகனங்களுக்கு மேல், சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடந்த, 2023ல் ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என, 6 இடங்களில், உயர்மட்ட மேம்பால பணிகள் துவங்கின. அதில், சாமல்பள்ளம், மேலுமலையில் பணிகள் முடிந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற, 4 இடங்களில் ஓராண்டிற்குள் முடிய வேண்டிய பணிகள், தற்போது வரை, மந்தகதியில் நடப்பதால், சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், கடந்த, 21ல் பேரிங் பழுதானதால், பாலம் துாணை விட்டு விலகி நிற்கிறது. கனரக வாகனங்கள், நான்கு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த சுங்க கட்டணம் செலுத்தி விட்டு, மாநில நெடுஞ்சாலைகளில் பயணித்து, தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து, அதன் பின் பெங்களூரு செல்ல வேண்டிய நிலை, வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் மற்றும் மேம்பால பழுதால், ஒரு மணி நேரத்திற்குள் கடக்க வேண்டிய, 55 கி.மீ., துாரத்தை கடக்க, 2 மணி நேரத்திற்கு மேலாகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பால பணிகள் மற்றும் பால பழுது சரியாகி விடும். அதன் பின் போக்குவரத்து சீராகும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், பத்தலப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, 37.93 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. அப்போது, ஓசூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பால், கனரக வாகனங்கள் சரியான நேரத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல முடிவதில்லை. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிய பால பணிகள், மேம்பால பழுதை மந்தகதியில் மேற்கொள்வதால், சுங்க கட்டணம் செலுத்தும், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.