உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக 13 ஏரிக்கு செல்லும் கால்வாய் துார்வார ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக 13 ஏரிக்கு செல்லும் கால்வாய் துார்வார ஆய்வு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு, 365.40 மி.மீ., எனஙற நிலையில், நடப்பாண்டில், 283.33 மீ.மீ., அளவே மழை பெய்தது. இது சராசரி அளவை விட, 22 சதவீதம் குறைவு. மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்தபோதும், வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்யும் நிலையிலும், பல இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு, கால்வாய் துார்வாராதது போன்றவையால், மழைநீரை சேகரிப்பதில் சிக்கல் ஏற்படும், என்ற புள்ளி விபரங்களுடன், 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையொட்டி நேற்று, கிருஷ்ணகிரி பெரிய ஏரி மற்றும் அந்த ஏரியிலிருந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 13 ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் தலைமையில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையது மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதுமான அளவு மழை பெய்துள்ளது. பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. தற்போது மாரச்சந்திரம் தடுப்பணையிலிருந்து பெரிய ஏரிக்கு வரும் கால்வாயும் துார்வாரப்பட்டு பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வரை, 50 சதவீத அளவிற்கு ஏரி நிரம்பிய நிலையில், வரும் நாட்களில், சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை முழுவதும் பெரிய ஏரிக்கு வரும். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, பெரிய ஏரியிலிருந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி ஏரி, சுண்டம்பட்டி, ஒரப்பம் சின்ன ஏரி, ஒரப்பம் பெரிய ஏரி, பாலிநாயனப்பள்ளி, ராசிப்பள்ளி, கெட்டூர், செந்தாரப்பள்ளி, நாராயணப்பன், மோடிகுப்பம், நக்கல்பட்டி, பயாஸ்கான் ஏரி மற்றும் காட்டாகரம் காசிம்கான் ஏரி ஆகிய, 13 ஏரிகளுக்கு பெரிய ஏரியிலிருந்து செல்லும் கால்வாய்களை துார்வாருவது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த அறிக்கையை, கலெக்டரிடம் சமர்பிப்போம். தொடர்ந்து அனைத்து கால்வாய்களும் துார்வாரும் பணி துவங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை