நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு தயார்
ஓசூர்: ''ஓசூரில் சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, கோடிகளில் இழப்பீடு கொடுக்க, மத்திய அரசு தயாராக உள்ளது,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூர் வழியாக அமைக்கப்படும் சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டில், 44 கி.மீ., துாரத்திற்கும் சர்வீஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக மாநில அரசு, சாலை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை ஏக்கருக்கு கோடிக்கணக்கில் வழங்குகிறது. ஆனால் தமிழகத்தில் லட்சத்தில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ எந்த அரசாக இருந்தாலும், விவசாயிகளுக்கு நிலங்களின் மதிப்பை கூட்டி தரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதை செயல்படுத்த, மாநில அரசின் சார்பில் முதற்கட்டமாக, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில அரசு சந்தை மதிப்பீட்டு தொகையை நிர்ணயித்து, அதற்கு முதல்வர் அனுமதி வழங்கி விட்டால், சாலை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகை எவ்வளவு கோடிகளில் இருந்தாலும், அதை மத்திய அரசு வழங்க தயாராக இருக்கிறது என, அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை, அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.