ஐராவதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணியை துவக்கி வைத்த முதல்வர்
சூளகிரி, அத்திமுகம், ஐராவதீஸ்வரர் கோவில் புனரமைப்பு திருப்பணியை, முதல்வர் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில், 1,000 ஆண்டுக்கு மேல் பழமையான ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான், காமாட்சி சமேத ஐராவதீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் என, இரு மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், இக்கோவிலை புனரமைப்பு திருப்பணி செய்ய, 1.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பூமி பூஜை செய்தார். கிருஷ்ண கிரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.கோவிலில், 240 மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சுவர், 336 சதுர மீட்டருக்கு தரைத்தளம், புதிய மடப்பள்ளி, தட்டோடு பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழகேஸ்வரர் மற்றும் சண்முகர் சன்னதி கோபுர விமானம் மற்றும் அனைத்து கோவில் சன்னதி களின் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முன்னதாக, கோவிலில் கலெக்டர் தினேஷ்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.