கல்விக்கு ஏற்ப மாணவர்களின் வாழ்க்கை உயர்கல்வி பயில கலெக்டர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, ''மாணவர்களின் கல்விக்கு ஏற்பத்தான், அவர்களின் வாழ்க்கை அமையும். எனவே மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும்,'' என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சேராத மாணவர்கள், உயர்கல்வி சேர, 'உயர்வுக்கு படி' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார்.கலெக்டர் தினேஷ்குமார் பேசுகையில்,'' மாவட்டத்தில், 15,000 மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்ததில், 1,098 மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில கல்லுாரியில் சேரவில்லை. இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் வகையில், தமிழக அரசு, 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடத்துகிறது. பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சேரும் மாணவ, மாணவியரின் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். இதை மேலும் அதிகரிக்க, பிளஸ் 2 பயின்ற அனைத்து மாணவ, மாணவியரும், ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் சேர வேண்டும். நீங்கள் கற்கும் கல்விக்கேற்பதான் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்,''என்றார்.விழாவில், 8 மாணவ, மாணவியருக்கு அரசு கலைக்கல்லுாரி, ஐ.டி.ஐ.,ல் சேர்ந்து கல்வி பயில்வதற்கான ஆணைகளை கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோர் வழங்கினர். சி.இ.ஓ., (பொ) முனிராஜ், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.