உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 5 நாட்களாக சாலையில் ஓடும் ஏரி நீர் காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு

5 நாட்களாக சாலையில் ஓடும் ஏரி நீர் காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், கால்வாய் ஆக்கிரமிப்பால் கடந்த, 5 நாட்களாக லிங்கம்மாள் ஏரி உபரிநீர் சாலையில் ஓடுகிறது. கலெக்டரின் உத்தரவை, நகராட்சி அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, தினமும் மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. கடந்த, 5ல் கிருஷ்ணகிரியில் மட்டும், 12 செ.மீ., மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள சின்னஏரி, லிங்கம்மாள் ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, தேவசமுத்திரம் ஏரி, கரீம்சாயபு ஏரி என, பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன. பழையபேட்டை மேல்தெருவில் அமைந்துள்ள லிங்கம்மாள் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. கால்வாய் ஆக்கிரமிப்பால், நேதாஜி சாலையை கடந்து, ஆசிப் நகருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், 25 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து தனி தீவானது. கடந்த, 5 காலை, அப்பகுதியை பார்வையிட்ட கலெக்டர் தினேஷ்குமார், 'லிங்கம்மாள் ஏரியில் இருந்து பாப்பாரப்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயை, அடுத்த நாளே துார்வார வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சமின்றி உடனே அகற்ற வேண்டும். யாராவது இடையூரு செய்தால் கலெக்டரின் உத்தரவு என சொல்லுங்கள். கால்வாயை, 2 அடிக்கு உயர்த்தி கட்ட வேண்டும். அடுத்த முறை இவ்வாறு ஏற்படாதவாறு நகராட்சி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், 5 நாட்களை கடந்தும் நகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளதால், நேற்று வரை நேதாஜி சாலையை கடந்து தண்ணீர் ஆசிப் நகரை சூழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று இது குறித்து கலெக்டர் தினஷே்குமாரிடம் கேட்டபோது, ''நேதாஜி சாலைக்கு உடனே ஆர்.டி.ஓ.,வை அனுப்புகிறேன். ஏரி உபரிநீர், சாலையில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை