சோளம், காராமணி விதைகள், புல் நறுக்கும் கருவி; மானிய விலையில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கிருஷ்ணகிரி: மானிய விலையில், தீவன சோளம், காராமணி விதைகள், மின்சாரத்தால் இயங்கும் புல்நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாசன வசதியுள்ள விவசாயிகளின் நிலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிட, விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில், தீவன சோளம் மற்றும் வேலிமசால் விதைகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள், மானாவாரி நிலத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் பயிரிட, தீவன சோளம் மற்றும் காராமணி விதைகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 150 எண்ணிக்கையிலான மின்சாரத்தால் இயங்கும் புல்நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.2.50 சதவீத மானியத்தில், மின்சாரத்தால் இயங்கும் புல்நறுக்கும் கருவியை பெற விரும்புவோர், குறைந்தபட்சம், 2 கால்நடைகளோடு, 0.50 ஏக்கர் பரப்பில், தீவன சாகுபடி செய்திருப்பதோடு, கருவியை இயக்க மின் வசதி இருக்க வேண்டும். அரசால் நிர்ணயம் செய்யப்படும், 50 சதவீத பயனாளி பங்களிப்பு தொகை செலுத்த விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். சிறு, குறு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது கிராமத்தின் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.