கிருஷ்ணகிரி : தமிழக அரசு, மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்குவது குறித்து பேசிய, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜ., நிர்வாகியுமான குஷ்பு, 'தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தால், பிச்சை போட்டால், மக்கள் ஓட்டு போடுவார்களா' என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குஷ்புவை கண்டித்தும், கிருஷ்ணகிரி ரவுண்டானாவில், தி.மு.க., மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். அப்போது குஷ்புவின் படத்திற்கு மாலை அணிவித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும், தி.மு.க., மகளிரணியினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, துணை அமைப்பாளர் கீதா, தொண்டரணி அமைப்பாளர் புஷ்பா, தகவல் தொழில்நுட்ப அணி மணிமொழி மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில் குஷ்புவை கண்டித்து, தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் தஸ்தகீர் தலைமை வகித்தார். இதில், குஷ்பு உருவப்படத்தை தீ வைத்து கொளுத்தினர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயஸ்ரீ, அவைத்தலைவர் கருணாநிதி, நகர துணை செயலாளர்கள் ரேகா, ஹரி, உட்பட பலர் பங்கேற்றனர்.