உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, டி.காணிகரஹள்ளியில் குருமன்ஸ் சமூகத்தினரின் வீரபத்திரசாமி கோவில் திருவிழா, ஆடிப்பெருக்கு அன்று நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. குலதெய்வ உற்சவர்கள் ஊர்வலம், கங்கை நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்கள் தலை மீது, தேங்காய் உடைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் டி.காணிகரஹள்ளி, உம்மியம்பட்டி, பாளையம்புதுார், சேலம் மாவட்டம் வேப்பிலைபட்டி, செசக்காரப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். * பாலக்கோடு அருகே, பிக்கனஹள்ளியில், குறும்பர் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கு நாளில் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் இவர்களின் இன வழக்கப்படி கொம்பு இசைக்கருவி ஊதி, பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆண்கள் கோலாட்டம் ஆடினர். பெண்கள் சாட்டையடி வாங்கி, தங்கள் மேல் உள்ள துஷ்டசக்திகளை நீக்கினர். திருவிழாவில் குரும்பர் சங்கம் மாநில தலைவர் ராஜசிம்மா ஹெக்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.* காரிமங்கலத்திலுள்ள வீரபத்திரசாமி கோவிலில், குருமன்ஸ் இன வழக்கப்படி கொம்பு இசைக்கருவி ஊதி, பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை