பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சூரசம்ஹாரம்
சேலம், ஆயிரக்கணக்கான பக்தர்களின், 'அரோகரா' கோஷம் முழங்க, சக்திவேல் கொண்டு கந்தசாமி சூரனை அழித்து தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டார். சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டு உற்சவத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 6:00 மணி முதல், மாலை வரை பக்தர்களால் கந்தசஷ்டி கவசம், 36 முறை பாராயணம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு கையில் சக்திவேல் ஏந்தியபடி கந்தசாமி போர்க்கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு எதிரில் அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். சூரசம்ஹாரத்தை காண காளிப்பட்டி, ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், காகாபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன் குவிந்திருந்தனர். 'வெற்றிவேல்' 'வீரவேல்' 'அரோகரா' என திரண்டிருந்த பக்தர்கள் கோஷங்கள் முழங்க, கந்தசாமி கோவிலை சுற்றி வந்து, ஒவ்வொரு திசையிலும் யானை முகசூரன், சிங்கமுகசூரன், ஆடுமுகசூரன், இறுதியாக சூரபத்மன் ஆகியோரை சக்திவேல் கொண்டு அழித்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார்.இன்று மாலை, 6:00 மணிக்கு தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு திருக்கல்யாண கோலத்தில் கந்தசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் சூரசம்ஹார விழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.