புரட்டாசி 3வது வார சனிக்கிழமை கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத, 3வது சனிக்கிழமையை ஒட்டி, அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்தாண்டு புரட்டாசி மாதம் கடந்த, செப்., 17ல், துவங்கியது. நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்பட்டியில் உள்ள வெங்கட்டரமண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் மொட்டையடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.அதே போல், வேலம்பட்டி அருகே பெரியமலை கோவில், ஐகொந்தம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள், ஊத்தங்கரை அடுத்த ஆனந்துார் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி காட்டு வீரஆஞ்சநேயர் கோவில் வெங்கடரமணசுவாமி, கிருஷ்ணகிரி பொன்மலைகுட்டை சீனிவாச பெருமாள், பாலேக்குளி அனுமந்தராய சுவாமி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜை நடந்தது.* சூளகிரி அருகே கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், புரட்டாசி, 3வது சனிக்கிழமையான நேற்று காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதேபோல், கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு, துளசி தீர்த்த பிரசாதம் மற்றம் சடாரி சேவையும் வழங்கப்பட்டன.அதேபோல், சூளகிரி வரதராஜ சுவாமி கோவில், பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவில், ஓசூர் வெங்கடேஷ் நகரில் மலை மீதுள்ள பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜை நடந்து.