தோட்ட இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, மின் இணைப்புக்கு, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தோட்டிக்குப்பத்தை சேர்ந்த விவசாயி, முனிகிருஷ்ணா, 36. இவர், தன் நிலத்தில் போட்டிருந்த போர்வெல்லுக்கு பூந்தோட்ட மின் இணைப்பு கேட்டு, தேன்கனிக்கோட்டை தெற்கு உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீண்ட நாட்களாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. நேற்று முன்தினம் வணிக ஆய்வாளர் தனபால், 52 என்பவரை சந்தித்து, மின் இணைப்பு குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர், மின் இணைப்பு வழங்க, -7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனிகிருஷ்ணா, இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 7,000 ரூபாயுடன் சென்ற முனிகிருஷ்ணா, நேற்று தேன்கனிக்கோட்டை உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்த தனபாலிடம், அதை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார், தனபாலை கைது செய்தனர்.