உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சியில் டெண்டர் காலாவதியாகியும் கட்டணம் வசூல்

ஓசூர் மாநகராட்சியில் டெண்டர் காலாவதியாகியும் கட்டணம் வசூல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் நடைபாதை கடைகளுக்கு, சுங்கம் வசூலிக்கும் உரிமம் வாயிலாக, இரு ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்தது. நடைபாதை வியாபாரிகளுக்கு சிரமத்தை தவிர்க்க, இரு ஆண்டுகளாக சுங்க வசூல் உரிமத்தை, மாநகராட்சி யாருக்கும் வழங்கவில்லை. இதை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதனால், ஏற்கனவே டெண்டர் எடுத்திருந்த தனி நபர்கள், நடைபாதை வியாபாரிகளிடம், இன்றுவரை சுங்க கட்டணம் வசூலிக்கின்றனர்.

குற்றச்சாட்டு

ஆயுத பூஜையின் போது ஒரே நாளில் பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர். அதன்படி, டெண்டர் எடுக்காமலேயே தனி நபர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி, அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது.மேலும், லாரி, மினி வேன், டிராக்டர் போன்ற வாகனங்களுக்கும், தலா 50 ரூபாய் என, ஓசூர் மாநகராட்சி என்ற பெயருடன் கூடிய டோக்கன் வழங்கி, சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் குபேரன் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார் ஆம்னி பஸ்களுக்கு, மூன்று ஆண்டுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் டெண்டர், கடந்தாண்டு விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.மார்ச் மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், நேற்று முன்தினம் வரை, ஏழு மாதமாக தினமும், 500க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு, தலா 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

நடவடிக்கை

இதன் வாயிலாக மாநகராட்சிக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாநகராட்சி சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஒருவர் உதவியாக இருந்துள்ளார். இதையறிந்த மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்து, சுங்கம் வசூல் செய்வதை உறுதி செய்துள்ளார்.நடைபாதை வியாபாரிகள், பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்து, தனி நபர்கள் கல்லா கட்டுவது தொடர் கதையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''நடைபாதை வியாபாரிகளிடம், சுங்க கட்டணம் வசூல் செய்ய, யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி வசூல் செய்தால் புகார் செய்யலாம். அவர்கள் மீது போலீசில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ