துவரையில் காய்புழு தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு பயிற்சி
துவரையில் காய்புழு தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு பயிற்சிகிருஷ்ணகிரி, டிச. 1-கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பாண்டில், 3,285 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை பூ, காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இதில், கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.வேளாண் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் விவசாயிகளிடம் கூறியதாவது:துவரை பூக்கும் தருணத்திலுள்ள போது, ஒரு ஏக்கருக்கு தேவையான, 4 கிலோ டி.ஏ.பி.,யை, 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, 24 மணி நேரம் ஊற வைக்கவும். மறுநாள் அதை வடிகட்டி, 190 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு, 200 லிட்டர் என்ற அளவில், மாலை வேளையில் மட்டும் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். துவரை சாகுபடியில் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, என்.பி.வி., ஒரு கிலோவுக்கு வி.எஸ்.பி., அசாடிராக்டின் 0.035 மி.லி., என்ற அளவில் கலந்து ஒரு ஏக்கரில் உள்ள பயிர்களுக்கு தெளிக்கலாம். ரசாயன முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதாக இருந்தால், பூச்சிக்கொல்லியுடன் இமாமெக்டின் பென்சோயேட் லிட்டருக்கு ஒரு கிராம் அல்லது இண்டாக்ஸோ கார்ப் லிட்டருக்கு 1.5 முதல் 1.75 மி.லி., என்ற அளவில் கலந்து விசை தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம், காய்ப்புழுவை எளிதாக கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.துவரையில் நோய் தாக்குதல் குறித்து, மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரையோ, கிருஷ்ணகிரி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுக தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார், வேளாண் அலுவலர்கள் பிரியா, கணேஷ்குமார் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் விஜயன், தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.