உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 9வது நாளாக தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 9வது நாளாக தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு9வது நாளாக தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கைகிருஷ்ணகிரி, அக். 25-கன மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், 9வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை, கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,324 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு நீர்வரத்து, 6,000 கன அடியாக அதிகரித்தது. அணையில், 50 அடிக்கு மேல் நீர் இருப்பால், அணையிலிருந்து, 6,792 கன அடி நீர் பிரதான, 3 ஷட்டர்கள் மற்றும் 3 சிறிய மதகின் மூலம் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணையாற்றின் இரு கரையை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து, தரைப்பாலத்தை மூழ்கடித்த படி செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் பிரதான, 2 நுழைவாயிலில், போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தென்பெண்ணையாறு ஓடும் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், அகரம், இருமத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சம்பந்தப்பட்ட பஞ்., நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்ட தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு, 9வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஆற்றின் கரையோரம், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை