கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 19வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 19வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த, 3 முதல், 17 வரை, 14 நாட்கள் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நேற்று காலை முதல், கிருஷ்ணகிரியில் லேசான சாரல் மழை பெய்தது.மேலும் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 1,201 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 1,320 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து பாசன கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 1,022 கன அடி என மொத்தம், 1,201 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டிருந்தது. நீர்மட்டம் அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 49.80 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தால், 19வது நாளாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் மழையளவு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பாரூரில், 18.80 மி.மீ., போச்சம்பள்ளி, 7.40, கே.ஆர்.பி., அணை, 7, பெனுகொண்டாபுரம், 5.20 என மொத்தம், 42.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.