உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு தொடரும் நீர்வரத்து 4வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி., அணைக்கு தொடரும் நீர்வரத்து 4வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி,கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், நான்காவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெய்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த, 20ல், கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 4,208 கன அடியாக இருந்த நீர்வரத்து, மழை பொழிவு இன்றி தற்போது குறைந்து வருகிறது.கடந்த 21ல், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 3,268 கன அடியாகவும், 22ல், 2,020 கன அடியாகவும் சரிந்த நிலையில் நேற்று, 1,951 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து தென்பெண்ண ஆற்றில், 1,682 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 51.10 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நான்காவது நாளாக நேற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை என மூன்று மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம்; ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். கே.ஆர்.பி., அணை தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், நான்காவது நாளாக அணை பகுதிக்கு வர பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை