கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், உடல்திறனை வளர்க்கும் கால்பந்தாட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கால்பந்தாட்டக்குழு மற்றும் அரிமா சங்கம் சார்பில், 5 முதல், 16 வயது வரை உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, காலை உணவுடன் கூடிய இலவச கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கால்பந்தாட்ட பயிற்சி குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று காலை பேரணி நடந்தது. பள்ளி மைதானத்தில் துவங்கிய பேரணியை, கால்பந்தாட்ட குழு துணைத்தலைவர் ராமநாதன் துவக்கி வைத்தார். பேரணியில், இலவச பயிற்சி பெற்று வரும், 255 மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். பேரணி, பெங்களூரு சாலை, ரவுண்டானா, சேலம் சாலை வழியாக மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது.அப்போது, உடல்திறன், மனத்திறன் மேம்படுத்தும் கால்பந்தாட்ட இலவச பயிற்சி குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வார விடுமுறை நாட்களில் இலவச பயிற்சிகள் அளிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். பேரணிக்கு பின், கிருஷ்ணகிரி, புட்பால் கிளப் என்ற வாசகத்தை, கே.எப்.சி., என்ற எழுத்து வடிவில் நின்று மாணவ, மாணவியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.