கால்நடைகளுடன் சென்ற விவசாயி மாயம் ட்ரோன் மூலம் தேடும் வனத்துறையினர்
ஓசூர், டிச. 19-கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனச்சரகத்தில் பல குழுக்களாக முகாமிட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரையை சேர்ந்த முத்தப்பா, 65, என்ற விவசாயி, தான் வளர்க்கும், 15க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரு மாடுகளை நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்காக வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்கு ஓட்டிச்சென்றார். இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. கேரட்டி வனப்பகுதியை ஒட்டிய நர்சரி பிளாட்டில் முத்தப்பா ஆடு மேய்த்து கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர். முத்தப்பா மாயமான தாவரக்கரை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. அதனால், தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு முத்தப்பா உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். முத்தப்பா வனப்பகுதிக்குள் கால்நடைகளுடன் சென்று, அவரை யானை தாக்கியதா என்ற சந்தேகம் வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. நொகனுார், தாவரக்கரை வனப்பகுதியில், ட்ரோன் கேமரா மற்றும் நவீன தொழில்நுட்பமான மொபைல் கேமரா யூனிட் ஆகியவை உதவியுடன், முத்தப்பா மற்றும் அவரது கால்நடைகள் உள்ளதா என, வனத்துறையினர் நேற்று மாலை வரை தேடி பார்த்தனர். ஆனால் அவரையும், கால்நடைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடி வருகின்றனர்.