தென்பெண்ணை ஆற்றின் கரையில் குப்பை மாசடையும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு
ஓசூர், கர்நாடக மாநிலம், நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்று நீர், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், தினமும் உபரி நீர் திறக்கப்பட்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு செல்கிறது. ஓசூர் அருகே, பேரண்டப்பள்ளி பகுதியில், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, குறுக்காக தென்பெண்ணை ஆறு கடந்து செல்கிறது. இதனால், அப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தையொட்டி ஆற்றின் கரையில் பிளாஸ்டிக் குப்பை குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளன.தொரப்பள்ளி பஞ்., நிர்வாகமும் குப்பையை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் குப்பை, ஆற்றில் விழுந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்றில், தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதால், ஏற்கனவே ஆற்று நீர் மாசடைந்துள்ளது. இந்நிலையில், குப்பையும் விழுந்து தண்ணீர் மேலும் மாசடைந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.