மாணவன் கடத்தி கொலை 2 வாலிபர்கள் மீது குண்டாஸ்
அஞ்செட்டி, அஞ்செட்டி அருகே, பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த வழக்கில், 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ், 46. கூலித்தொழிலாளி. இவரது மகன் ரோகித், 13. அஞ்செட்டி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம், 2ம் தேதி அவரை, காரில் கடத்திய மர்ம நபர்கள், கொலை செய்து அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள, திருமுடுக்கு கொண்டைஊசி வளைவில், 50 அடி பள்ளத்தில், மாணவன் சடலத்தை வீசி சென்றனர். அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இக்கொலை தொடர்பாக, மாவனட்டியை சேர்ந்த முத்தண்ணன் மகன் மாதேவன், 22, அவரது காதலியான, 18 வயது கல்லுாரி மாணவி மற்றும் கர்நாடகா மாநிலம், உன்சனஹள்ளியை சேர்ந்த மாரப்பா மகன் மாதேவன், 21, ஆகிய மூவரை, அஞ்செட்டி போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இதில், இரு மாதேவனையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை செய்தார். அதையேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையிலுள்ள அவர்களிடம் நேற்று வழங்கப்பட்டது.