தர்மபுரி, கி.கிரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டை தெருவில் உள்ள ஐயப்பன் கோவிலில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று ஆஞ்சநேயருக்கு, 1,008 வடமாலை சாற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், ஓசூரில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள பண்டாஞ்சநேயர் கோவில், ஏரித்தெரு ஆஞ்சநேயர், டி.வி.எஸ்., நகர் மற்றும் மத்தம் அக்ரஹாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. துளசி மாலை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். *கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில், மகா மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, உற்சவர் நகர் வலம் நடந்தது. கோட்டை கிருஷ்ணதேவராயர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பக்த வீரஆஞ்சநேயர் கோவில், செந்தில் நகர் உடுப்பி கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திர ஸ்வாமிகள் கோவில், பெத்தனப்பள்ளி பக்த ஆஞ்சநேயர் கோவில், எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.*தர்மபுரி டவுன் எஸ்.வி., ரோட்டில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் வடமாலை, வெற்றிலை மாலை உள்ளிட்டவை சாத்தி, வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, மின்வாரிய அலுவலகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நல்லம்பள்ளி அருகே, முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தன. இதில், சந்தன காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, ரயில் மூலம் சேலம், மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொப்பூர் கணவாய் மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர், 5,008 வட மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். லளிகத்தில் உள்ள கல்யாண ஆஞ்சநேயர் செந்துார காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.*அரூர் பொதுப்பணித்துறை குடியிருப்பில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், அரூர் வாணீஸ்வரர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ அனுகிரக ஆஞ்சநேயர் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தீர்த்தமலை, மொரப்பூர், தென்கரைகோட்டை வீரசஞ்சீவராமசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில், அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.