உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வருக்காக காத்திருக்கும் ஓசூர் சுகாதார நிலையங்கள்

முதல்வருக்காக காத்திருக்கும் ஓசூர் சுகாதார நிலையங்கள்

ஓசூர்::ஓசூர் மாநகராட்சியில் நான்கு துணை சுகாதார நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டு, முதல்வர் திறப்பதற்காக மூடியே வைக்கப்பட்டுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில், 27 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு ஆவணங்களை பராமரிக்க வேண்டியுள்ளது. இவர்கள் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால், அந்தந்த பகுதி அங்கன்வாடி மையங்களுக்கு சென்று பணிகளை கவனிக்கின்றனர். இந்நிலையில், தளி சாலையிலுள்ள கணபதி நகர், மூக்கண்டப்பள்ளி, கே.சி.சி., நகர், கொல்லர்பேட்டை ஆகிய நான்கு இடங்களில், தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பில், நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, முதல்வர் ஸ்டாலின் அல்லது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் என, யாராவது ஒருவர் திறந்து வைக்க வேண்டுமென கூறி, மாநகராட்சி அவற்றை மூடியே வைத்துள்ளது.இரண்டாம் கட்டமாக, நேரு நகர், இமாம்படா, மத்திகிரி ஆகிய மூன்று இடங்களில் துணை சுகாதார நிலையம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே கட்டிய கட்டடங்களை திறக்காமல் இருப்பதால், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் மட்டுமின்றி, கர்ப்பிணியரும் சிரமப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !