இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை வகித்தார். கோட்ட தலைவர் நிசார் அகமது, உதவி செயலாளர்கள் கமலேசன், திருமால், துணைத்தலைவர்கள் கோவிந்தன், ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், ஜி.டி.எஸ்., ஊழியர்களின் சம்பளம், கிராஜூவிட்டி, பென்சன், இன்சூரன்ஸ் வழங்க, 8வது ஊதியக்குழு கமிட்டியில் சேர்க்க வேண்டும். தினம், தினம் மேளா என்ற பெயரில், டார்கெட், டார்ச்சரை நிறுத்தி ஊழியர்களை அன்போடு, அரவணைத்து வேலை வாங்க வேண்டும். இலாகாவிலிருந்து வெளியேற்றியுள்ள பொதுச்செயலாளர் மகாதேவய்யாவை உடனே பணியமர்த்த வேண்டும். சிறு சிறு தவறுகளுக்காக ரூல், 10 'பி'யை போட்டு ஊழியர்களை தண்டிக்கக்கூடாது. வீடியோ கான்பரன்சுக்கு, நல்ல மொபைல் போன் வழங்கி, தற்போதுள்ள மொபைல் போனை திரும்பப்பெற வேண்டும். அவசர அவசிய காரியங்களுக்கும், பிரசவத்திற்கும் உள்ள விடுப்புகளை உடனே வழங்க வேண்டும். 2018ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட புதியதாக பணியில் சேர்ந்த ஜி.டி.எஸ்., ஊழியர்களுக்கு, டி.ஆர்.சி.ஏ., லெவல்-1ல் இருந்து, லெவல்-2ஐ உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.