உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓசூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஓசூர், ஓசூர் மாநகராட்சியில், குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது என, கவுன்சிலர் வலியுறுத்தினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் ஷபீர் ஆலம் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:மேயர் சத்யா: அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், பட்டா கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன்: ராஜகணபதி நகரில், ஹவுசிங் போர்டு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என கூறுகின்றனர்.மேயர்: ஹவுசிங் போர்டு அதிகாரிகளிடம் பேசுகிறேன்.அ.தி.மு.க., சிவராம்: எங்கள் வார்டில் தனியார் நிறுவனங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, ரசாயனம் கலந்த தண்ணீர் வருகிறது. 6 மாதமாக அழைத்தும் தொழிற்சாலைகளுக்கு ஆய்வுக்கு வர பயப்படுகிறீர்கள்.மேயர்: ஆய்வுக்கு வர பயம் இல்லை. மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வருவதாக கூறியுள்ளார்.அ.தி.மு.க., ஜெயப்பிரகாஷ்: பத்திரிகையாளர்களை புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் தடுக்கிறீர்கள்.மேயர்: சபை நடுவே வந்து தான் புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம் என கூறியுள்ளோம். மற்றபடி அவர்கள் செய்தி சேகரிக்க எந்த தடையும் இல்லை.தி.மு.க., மாதேஸ்வரன்: தேர்ப்பேட்டையில் பூமிக்கடியில் மின்சார கேபிள்களை பதிக்க கேட்டும் நடவடிக்கை இல்லை. சீத்தாராம்மேட்டில் உள்ள காலி இடத்தில், கலையரங்கம் கட்ட வேண்டும். தண்ணீர் கட்டணம் மற்றும் டிபாசிட் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சியை போல், ஓசூரில் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறவில்லை. அதனால் தண்ணீர் வரியை உயர்த்தாமல் பழைய நிலையே தொடர வேண்டும்.மேயர்: கலையரங்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பழைய நிலையிலேயே மாதம், 125 ரூபாய் தண்ணீர் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூமிக்கடியில் மின்சார கேபிள்களை பதிக்க திட்ட மதிப்பீடு கேட்டுள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி