| ADDED : ஆக 23, 2011 01:07 AM
கிருஷ்ணகிரி: கர்நாடகா மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் 'நந்திஹில்ஸ்' மலையில் உருவாகும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அடுத்து பெரியமுத்தூர் அருகே கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 52 அடியாகும். அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு காவேரிப்பட்டணம், பெரியமுத்தூர், திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, பையூர், வேலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 10,000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் இரு போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு மாவட்டத்தில் பரவலாக தென் மேற்கு பருவமழை முன்கட்டியே பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 47 அடியை தொட்டது. இதனால், முதல் போக நெல்சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஜூலை 19ம் தேதியே அணை இடது மற்றும் வலது புறகால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனை கொண்டு விவசாயிகள் நெல் நாற்றுவிட்டு நடவு பணிகளை மேற்கொண்டனர். கர்நாடகா மாநிலத்தில் தொடர்மழை பெய்வதாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 18ம் தேதி இரவு மாவட்டம் முழுவதும் 1125.8 மி.மீட்டர் மழை கொட்டியது. இதனால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று காலை நிலவரபடி அணைக்கு வினாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. கே.ஆர்.பி., அணை பாசன பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் இடது மற்றும் வலது புற கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டமான 52 அடியில் தற்போது, 49.55 அடிநீர் உள்ளது. கர்நாடகா மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தென்பெண்ணை ஆற்று கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சம்பா பருவத்தில் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் நாற்றுவிட்டு நடவு பணிகளை மேற் கொண்டுள்ளனர். முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான நீரை விட அதிக அளவு நீர் அணையில் தேக்கிவைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை நெல் சாகுபடி நன்றாக இருக்கும். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 47 அடியை தொட்டவுடன் தென்பெண்ணை ஆற்று கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இதன் அடிப்படையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ஆற்றுக்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.