உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணையின் கீழ் பகுதியில் தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

கே.ஆர்.பி., அணையின் கீழ் பகுதியில் தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணையின் கீழ் உள்ள, 47 ஏரிகளில், 31 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 13 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 23 இரவில் கெலவரப்பள்ளி அணை பகுதியில், 120 மி.மீ., மழை, கிருஷ்ணகிரியில், 102 மி.மீ., மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கே.ஆர்.பி., அணையின் கீழ் உள்ள, 26 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், பாம்பாறு அணையின் கீழ் உள்ள, 5 ஏரிகளில், தீர்த்தவலசை ஏரி முழுமையாகவும், பெனுகொண்டாபுரம் ஏரி, அத்திப்பள்ளம் ஏரி, பி.ஆர். ஏரிகள், 50 சதவீதமும், காட்டுசிங்கிரிபட்டி ஏரியில், 25 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளன. பாரூர் பெரிய ஏரியின் கீழ் உள்ள, 16 ஏரிகளில், புலியூர் ஜெம்பேரி, பாரூர் பெரிய ஏரி, வாடமங்கலம் ஏரி, விளங்காமுடி ஏரி என, 4 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், பாரூர் சின்ன ஏரி, பண்ணந்துார் ஏரி, நெடுங்கல் ஏரி, மாவதுார் ஏரி, ஆனந்துார் ஏரி, திப்பன்ணன் குட்டை, கோட்டப்பட்டி ஏரி என, 8 ஏரிகளில், 76 சதவீதம் முதல், 99 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளன. மருதேரி, தேவீரஅள்ளி, அச்சுகுட்டை ஏரி, திருவணம்பட்டி ஏரி என, 4 ஏரிகளில், 50 சதவீதம் முதல், 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள, 47 ஏரிகளில், 31 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ