கல்லுாரி மாணவியுடன் காதல் திருமணம் போலீசார் முன் வாலிபருக்கு அடி, உதை
மத்துார், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கல்லுாரி மாணவியை காதல் திருமணம் செய்த வாலிபரை, ஸ்டேஷனில் போலீசார் முன், மாணவியின் உறவினர் அடித்து உதைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டப்பட்டியை சேர்ந்தவர் வேலு, 22. போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவருக்கு, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்த கெட்டுப்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவி ஜோதிலட்சுமி, 19 என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகினர். அது காதலாக மாறியது. இதையறிந்த பெற்றோர் மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த, 16ல் கல்லுாரி செல்வதாக கூறிச்சென்ற மாணவி ஜோதிலட்சுமி மாயமானார். இது குறித்து அவரது தாய் மாதம்மாள், அதியமான்கோட்டை போலீசில் புகாரளித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மாணவி ஜோதிலட்சுமி, தன் காதலன் வேலுவை, சேலத்திலுள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, நேற்று மத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். இருவரும் வருவதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மத்துார் பஸ் ஸ்டாண்டில் அவர்களை மடக்கி பிடித்து, வேலுவை சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு வேலுவுடன் வந்த நண்பர்களும் தாக்கினர். இரு தரப்பினரையும் மத்துார் போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கும் போலீசார் கண்ணேதிரே வேலுவை, ஜோதிலட்சுமியின் உறவினர், அடித்து உதைத்தனர். அவர்களை தடுத்த போலீசார், இரு தரப்பினரையும் கைது செய்து விடுவோம் என எச்சரித்து, பேச்சுவார்த்தை நடத்தி, காதல் ஜோடி மற்றும் மாணவியின் பெற்றோரை தனித்தனியாக அனுப்பி வைத்தனர்.