ரூ.1.27 லட்சம் மதிப்பு குட்கா காரில் கடத்தியவருக்கு வலை
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், டி.வி.எஸ்., சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் வாகனச்சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த மாருதி சிலிரோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகாவிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, தமிழகத்திற்குள் கடத்தி வருவது தெரிந்தது.காரில் இருந்த, 1.27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 124 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளிரியோடை அருகே புதுமடம் பகுதியை சேர்ந்த டிரைவர் சுதாகர், 44, என்பவரை தேடி வருகின்றனர்.சூளகிரி ஸ்டேஷன் போலீசார், அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நேற்று பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சின்ன ஓடை தெருவை சேர்ந்த சையத் அபுதாகீர், 49, என்பவர் வைத்திருந்த பையில், 15,600 ரூபாய் மதிப்புள்ள, 8.8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சையத் அபுதாகீரை கைது செய்தனர்.