பஸ் சேவை, வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைப்பு
ஓசூர், ஓசூரில், பஸ் சேவை மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, 8 வழித்தடங்களில் மகளிர் விடியல் பயண பஸ் சேவை மற்றும் 2 வழித்தடங்களில் வழித்தட நீட்டிப்பிற்கான பஸ் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், மேயர் சத்யா முன்னிலை வகித்தனர். தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து பஸ் சேவையை துவக்கி வைத்தார். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், தளியிலிருந்து பேலாளம் வரை, 5.05 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணி, சூளகிரி அருகே காமன்தொட்டியில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை, அமைச்சர் சக்கரபாணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். சின்னாறு கிராமத்தில், புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். ஒட்டேனுார் பகுதியில், 38.40 லட்சம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுய உதவிக்குழு கட்டட பணியை, பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.