கிருஷ்ணகிரி: தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மாம்பழம் கடைகளில், விலை அதிகரித்தாலும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் கிராமத்தில் இருந்து, காரிமங்கலம் வரை சாலையோரங்களின் இரண்டு பக்கமும் மாம்பழங்கள் விற்பனைக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மழையின்மை மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக, மா சாகுபடி, 75 சதவீதம் குறைந்துள்ளதால், 25 சதவீதம் மட்டுமே மா அறுவடை செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மாம்பழங்கள் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன.காவேரிப்பட்டணத்தை சுற்றியுள்ள மோரமடுகு, சாப்பரம், பந்தேரி, வேலம்பட்டி, சந்துார் மற்றும் குண்டாங்காடு போன்ற பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மாம்பழங்களை வாங்கி இங்கு விற்பனைக்காக வைத்துள்ளனர். செந்துாரா கிலோ, 80 ரூபாய், பெங்களூரா, 250, பங்கன பள்ளி, 120, மல்கோவா, 240, இமாம் பசந்த், 250, பீத்தர், 120, அல்போன்சா, 150, பகாடு, 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்துவிட்டு பிறகு வாங்கி செல்கின்றனர். விலை அதிகரித்தாலும் மாம்பழங்களை வாங்கிச் செல்ல வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மே, ஜூன், ஜூலை என மூன்று மாதங்கள் இங்கு மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.