மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சிலை பூஜை பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்
கிருஷ்ணகிரி, நாடு முழுவதும் இன்று(27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில், பூஜை பொருட்கள் வழங்குவது வழக்கம்.அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி அருகே பாப்பாரப்பட்டியில் மிலாடி நபி குழு தலைவரும், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று, ஒரு அடி விநாயகர் சிலை, ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம், கற்பூரம், ஊதுப்பத்தி, பூக்கள் அடங்கிய தட்டுக்களை வழங்கினர். இதுகுறித்து, மிலாடி நபி குழு தலைவர் அஸ்லம் கூறுகையில், “15 ஆண்டுகளாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியன்று, பூஜை பொருட்கள் வழங்கி வருகிறோம். நடப்பாண்டில், 100 வீடுகளுக்கு விநாயகர் சிலைகளுடன், பூஜை பொருட்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தோம்,” என்றார். பிர்தோஸ்கான், கராமத், ஜமீர், சமீயுல்லா, ரியாஸ், பப்லு, நயாஸ், இர்பான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தி.மு.க., கிழக்கு நகர பொறுப்பாளர் வேலுமணி, நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயகுமார், சந்தோஷ் உடனிருந்தனர்.